சென்னை திருவொற்றியூரில் ஓயாமல் குடும்ப பிரச்சனை பற்றி சகோதரியிடம் புரணி பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை உலக்கையால் அடித்துக் கொலை செய்தார். கொலை செய்த கையோடு போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 51 வயதாகும் துரை வேலைக்கு செல்லாமல் வீட்டில் சுற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி இந்திராணி (48) திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

இந்திராணி அதே தெருவில் வசித்து வரும் சகோதரியான கஸ்தூரி என்பவரது வீட்டுக்கு சென்று, தன் கணவர் வேலைக்கு செல்லாமல் சுற்றுவது குறித்தும், தனது குடும்ப பிரச்சினை குறித்து அடிக்கடி கூறுவாராம். இது துரைக்கு பிடிக்காததால் அவர் தொடர்ந்து மனைவியை கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்திராணி, தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று தலைக்கு ‘டை’ அடித்துவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது துரைக்கும், இந்திராணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாகி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த துரை, வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி இந்திராணியின் தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த இந்திராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சண்டை பற்றி அறிந்ததும் அதே பகுதியில் வசித்து வரும் இந்திராணியின் சகோதரி கஸ்தூரியும் அங்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த துரை, “இனிமேல் இந்திராணி உங்கள் வீட்டுக்கு வரமாட்டார்” என கூறிவிட்டு நேராக அங்கிருந்து கிளம்பி சென்றார்.இதையடுத்து உள்ளே சென்ற கஸ்தூரி, வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அவரது சகோதரி இந்திராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே மனைவியை கொலை செய்த துரை, நேராக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.