ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை அதிகாரி வீட்டில் பீரோவில் இருந்த தங்க நகைகளை நர்ஸும் அவருடைய காதலன் ஸ்விக்கி டெலிவரி ஊழியரும் திருடிச் சென்ற விவகாரத்தில் அந்த ஊழியரின் வீட்டு டிவி ஸ்பீக்கரில் தங்கமாக கொட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக்நகர் 62 ஆவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை பொறியாளர் மதுரகவி. இவர் தனது மனைவி சுந்தரவள்ளியுடன் குடியிருப்பிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வருகிறார்.

மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அண்ணா நகரில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் சுழற்சி முறையில் செவிலியர்களை பணியமர்த்தியுள்ளனர். கடந்த 6 ஆம் தேதி பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 185 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக காவல் நிலையத்தில் மதுரகவி புகார் அளித்தார்.காவல் ஆய்வாளர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளியை கவனித்து வந்த செவிலியர்களில் தேவி என்பவர் திடீரென பணியிலிருந்து விலகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து வேலைக்கு அமர்த்திய ஏஜென்சி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது தேவியின் செல்போன் எண்ணை போலீஸார் கேட்டு பெற்றனர். அந்த எண்ணுக்கு போன் செய்த போது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. அத்துடன் ஏஜென்சி அளித்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு தேவி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. அதாவது பொய்யான முகவரி கொடுத்து ஏஜென்சியில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்ததும்.

இதையடுத்து தேவியின் செல்போன் எண்ணில் வந்த கால்கள் குறித்து ஆய்வு செய்த போது அவருக்கு ஒரே நாளில் இருந்து 50க்கும் மேற்பட்ட முறை ஒருவர் தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் குறித்த விசாரணையில் அவர் ஸ்விக்கி டெலிவரி பாய் ஜெகன்னாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய செல்போன் டவரை வைத்து போலீஸார் தேடினர். இதில் அவர்கள் விழுப்புரம் அருகே லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி வந்தது தெரியவந்தது. உடனே போலீஸார் விழுப்புரம் அருகே அவர்கள் தங்கியிருந்த லாட்ஜை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அங்கு அறையில் இருந்த தேவியையும் ஜெகன்னாதனையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்ராம்பட்டை சேர்ந்தவர் தேவி. இவர் செவிலியர். இவருடைய ஆண் நண்பர் ஜெகன்னாதன் மூலம் திட்டமிட்டே மதுரகவியின வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. மதுரகவியின் வீட்டு பீரோவில் கணக்கற்ற நகைகள் இருப்பதை தேவி, ஜெகன்னாதனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் திட்டமிட்டு கடந்த 5 ஆம் தேதி நகை, பணத்தை திருடிவிட்டு போலீஸாரிடம் சிக்காமல் இருக்க மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என ஊர் ஊராக சுற்றியது தெரியவந்தது. வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் செவிலியர்கள் மாறுவதால் தான் திருடினால் போலீஸாருக்கு சந்தேகம் வராது என எண்ணியே திருடியதாக தேவி தெரிவித்தார். சொகுசாக வாழ ஆசைப்பட்டு இப்படி செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து ஜெகன்னாதன் தங்கியிருந்த அடையார் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டிவி ஸ்பீக்கரை தட்டிய போது உள்ளே இருந்து தங்க நகைகள் கொட்டியது. 185 சவரன் திருடு போனதாக புகார் கூறப்பட்ட நிலையில் போலீஸார் 207 சவரன் நகைகளை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
