இயக்குநர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டு உள்ள வீடியோவில் அவர் ஆணவத்துடன் பேசி உள்ளதாக சர்ச்சைகள் வெடித்துள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனையின் காரணமாக உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருவதுடன் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், “என் மீது மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருந்த நண்பரும் நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமான செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். ஆரம்பத்தில் மனோ பாலா பத்திரிகையாளராகவும் அதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

இந்த நிலையில் இளையராஜா தனது இரங்கல் குறிப்பில் ,என்னை எல்லா காலங்களிலும் சந்தித்து வருபவர் மனோபாலா. அதன் பிறகு அவர் இயக்குநரானாலும் நடிகரானாலும், அடிக்கடி வந்து ரெக்கார்டிங் சமயத்தில் அனைத்து விசயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியடைய செய்வார். மேலும் “வீட்டில் இருந்து நான் கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டும் நேரத்தில் நான் வரும் நேரத்துக்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்.” என்று இளையராஜா சொன்னது விவாதப் பொருளாகி இருக்கிறது.

ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும்போதும் கூட தற்புகழ்ச்சி அவசியமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகிறார்கள். ஒருவர் பட்ட அவமானங்களை மரணித்த பிறகு சுட்டிக்காட்டுவது அவர்களின் சுயமரியாதையை சீண்டும் செயல் என்ற குரல்களும் ஒலிக்கின்றன. இந்த வீடியோவில் இளையராஜா பெருமை பேசியதாகவும் இது ஆணவம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம், இளையராஜா மனோபாலா உடனான முதல் சந்திப்பையே நினைவுகூர்ந்ததாகவும், இதில் எந்த ஆணவமும் பெருமையும் இல்லை என்ற கருத்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
