பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு சில வருடங்களாக பத்து ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற ஒரு வதந்தி நம்முடைய மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் பல சில்லறை வணிகம் செய்யும் இடங்களில் இந்த பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாமல் இருக்கிறது.

சென்னையில் மட்டும்தான் இந்த பத்து ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை தவிர்த்து பல நகரங்களில் மக்கள் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேருந்துகளிலும் இதை வாங்காமல் அளக்களித்து வருகின்றனர். அரசு பேருந்திலேயே இதை வாங்க முன்வராத போது பொதுமக்கள் எப்படி வாங்குவார்கள் என்ற ஒரு பேச்சும் மக்கள் மத்தியில் அடிபட்டது.
தற்போது மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டுக்காக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதனை மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நடத்துனர்களுக்கு கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என போக்குவரத்துக் கழகம் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
