பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று இணை ஆணையர் மாரி முத்து தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவ லர்கள் முன்னிலை வகித்தனர். பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.2 கோடியே 65 லட்சத்து 64 ஆயிரத்து 874 ரொக்கம், தங்கம் 1,025 கிராம், வெள்ளி 13,573 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 878 கிடைத்துள்ளன.

பழனி முருகன் கோவிலில் திடீர் மாற்றம்:
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு படத்துடன் இலவச டிக்கெட் தருவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தண்டாயுதபாணி சாமி கோவிலில் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதியை செய்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை முருகன் கோவில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்றது.
இங்குதான் கடைசியாக முருகன் வந்ததாக ஐதீகம் உண்டு. பழனி மலை முருகன் கோயில் தான் தமிழ்நாட்டின் மிகவும் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்று. இங்கு கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். விஷேச நாட்களில் கோயிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். தைபூசத்தின் போது பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். மேலும் கார்த்திகை மார்கழி மாதங்களில் மிக அதிக கூட்டம் இருக்கும்.

பழனி மலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது முக்கிய நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். திருவிழா உள்ளிட்ட முக்கிய நாட்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 முதல் 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கியூ ஆர் கோடுடன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதனை காண்பித்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின் பெயர், நாள், நேரம் குறிப்பிட்டு கியூஆர் கோடுடன் டிக்கெட் வழங்கும் நடைமுறை இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முடி காணிக்கை செலுத்திய பிறகு மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து அதில் முடி இறக்கம் செய்த தொழிலாளியின் புகைப்படத்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது. அப்போது அதிலுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கோவில் பணியாளர்கள், பக்தர்களை வெளியே அனுப்புகிறார்கள்.
மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண்பக்தர்களின் புகைப்படமும் எடுக்கிறார்கள். இந்த புதிய நடை முறையால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடி காணிக்கை செலுத்துவோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
முடி காணிக்கை செலுத்த, முடி இறக்கம் செய்ய ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவஸ்தானம் சார்பில் மொட்டையடிக்கும் பெண்களுக்கு மூன்று ரூ.100 தரிசன டிக்கெட்டுகளுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இவவச டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டையடித்து பணம் பறிப்பில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.
இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்யும் பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழியர்களை அடையாளம் காணவும், இந்த புதிய நடைமுறையை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.