சென்னையில் பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனின் உடலை கிறிஸ்டியன் முறைப்படி அடக்கம் செய்வதற்கு இடம் தராததால், “ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்ல வேண்டும்” என்று உயிரிழந்த சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வெற்றிவேல் மற்றும் ஜெனிபர் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தான் தீக்ஷித் இவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் எதிர்பாராதவிதமாக வேன் அவர் மீது மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தார்..

இதனால் அந்த பள்ளியின் ஓட்டுனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆறுதலும் தெரிவித்திருந்தார். இதன்படி பள்ளியின் தாளாளர் கைது செய்யும் வரை மாணவனின் உடலை நாங்கள் பெற மாட்டோம் என்று பெற்றோர்கள் போராட்டம் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் வந்து சமாதானம் செய்ததால் பிறகு உடலை வாங்க ஒப்புக் கொண்டனர்.

தற்போது இது குறித்து மாணவனின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில் :- “நான் கிறிஸ்டியன் என்னுடைய கணவர் இந்து என்னுடைய மகனுக்கு இரண்டு மதமே பிடிக்கும் ஆனால் ஜீசசை அவன் மிகவும் விரும்புவான். அதனால் கிறிஸ்டியன் முறைப்படி அவனது உடலை அடக்கம் செய்யலாம் என நினைத்து, ஆர்சி சபைக்கு போன்போட்டு கேட்டேன் அதற்கு நீங்கள் சந்தா கட்ட வேண்டும் அதனால் குழந்தையை புதைக்க இங்கே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர், இதனையடுத்து சிஎஸ்ஐ சபையிடம் அணுகியபோது நீங்கள் சிஎஸ்ஐ என்பதை உறுதி செய்ய மதுரையில் இருந்து ஒரு சான்றிதழை வாங்கி வரவேண்டும் அப்படி வாங்கி வந்தால் தான் இங்கே புதைக்க இடம் தருவோம் என்றனர். இப்படி சொல்ல உங்களுக்கு எல்லாம் அசிங்கமா இல்லையா நானும் கிறிஸ்டியன் தான் ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எப்படி கிறிஸ்டியன் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்” என்று அந்த குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.