திமுக அரசின் ஊழல் பட்டியலை நான் வெளியிட்டால் திமுக ஆட்சியை கவிழ்ந்து விடும் என பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசியுள்ளார்.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் விமான மூலம் திருச்சி செல்ல அங்கு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :- “ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தியது பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் சமூக நீதி சிந்தனைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அவர்களின் ஒரே ஒரு சாதனை அனைத்து இடத்திலும் விலையை உயர்த்தி கட்சியை நடத்துவது தான்.

சொத்து வரி, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி இந்த அரசு செயல்படுகிறது. மேலும் முன்பு செய்த தவறில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாத அரசாக இருக்கிறது. இந்த அரசை கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு கோரி தான் மின் கட்டணத்தை உயர்த்தினோம் எனக் கூறினார்கள். ஆனால் அவ்வாறு மத்திய அரசு கூறவே இல்லை என விளக்கம் கேட்டதற்கு மின்துறை அமைச்சர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
மத்திய அரசின் மீது பழி போடுவது மட்டும் தான் திமுகவுக்கு தெரிந்த ஒரே அரசியல். அதுவே தற்போது வாடிக்கையாக இருக்கிறது. அமைச்சர்களும் சில ஒப்பந்தக்காரர்களும் பயன் அடையவே விலைகள் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் டீசல் கேஸ் நம்முடைய கையில் இல்லை அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது. அந்த விலை உயர்வுக்கு மாநில அரசு உயர்த்தும் விலை உயர்வுக்கு முடிச்சு போடக்கூடாது.
அது மட்டும் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மௌனம் காத்தது திமுக அரசு தான். அதனால் தான் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். குறிப்பாக காவல்துறை விசாரணையை தாமதப்படுத்தியதும் இதற்கு ஒரு காரணம். மேலும் இந்த அரசின் மெத்தன போக்கால் தான் தற்போது கலவரங்கள் உருவாகி வருகிறது. அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு கெட்ட பெயர் வர காரணம் திமுகவின் செயலின்மை தான்.
பாஸ்போர்ட் ஊழல் தனிமனிதன் தொடர்பானது அல்ல, அது இந்திய இறையாண்மையை பாதிக்கக் கூடியது. இது தொடர்பாக உளவுத்துறை ஏடிஜிபி மீது கவர்னரிடம் புகார் அளித்தோம், நிச்சயமாக இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். மேலும் திமுக அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியலை நான் வெளியிட்டால் ஆட்சியை கவிழ்ந்து விடும்” என்று திமுகவிற்கு பயம் காட்டியுள்ளார் அண்ணாமலை.
