பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தியதால் இளம் பெண் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் தான் இஸ்ரேல் இவருக்கு வயது 45. இவர் பள்ளிப்பட்டு அருகே உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுனிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர். இவர்களுக்கு 22 வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும் 18 வயதில் சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா டிகிரி படித்து முடித்துவிட்டு சென்னையில் தாயுடன் தங்கி உள்ளார்.
சௌந்தர்யா டிப்ளமோ கேட்டரிங் படித்துள்ளார். இந்த நிலையில் சௌந்தர்யாவை பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகள் சௌந்தர்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று சந்தேகித்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்த போது சௌந்தர்யா அங்கு தூக்கில் பிணமாக தொங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து இஸ்ரேல் பள்ளிப்பட்டு போலீசாருக்கு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
