என் இன்னொரு அவதாரத்தை காட்டினால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் நடமாடவே முடியாது என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அவருக்கு தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருந்து வருபவர் வீரலட்சுமி. விஜயலட்சுமிக்காக சீமான் வீடு, அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்தார். ஆனால் விஜயலட்சுமி வேண்டுகோளுக்காக அந்த போராட்டத்தை கைவிட்டார் வீரலட்மி.

இதனைத் தொடர்ந்து சென்னை போலீசில் விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது புகார் கொடுக்கும் போது உடன் இருந்தார் வீரலட்சுமி. இந்த புகார் கொடுத்த கையோடு, விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகின.

இருந்த போதும் விஜயலட்சுமியுடன் ஏதோ ஒரு வகையில் இணக்கமான போக்கையே வீரலட்சுமி வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நாம் தமிழர் கட்சியினர், வீரலட்சுமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட வீரலட்சுமியை சீமான் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வீரலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்றார். அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமியுடன் மல்லுக்கட்டினர்- சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வீரலட்சுமியே வெளியே வா என்றெல்லாம் முழக்கமிட்டனர்.

இது பற்றி வீரலட்சுமி கூறியதாவது: சீமான் தொடக்க காலத்தில் திராவிடர் கழக மேடைகளில்தான் பேசினார்; அவர்கள் கொடுத்த சாப்பாட்டைதான் சாப்பிட்டர்; அவர்கள் வாங்கி கொடுத்த உடையைத்தான் போட்டுக் கொண்டார். எனக்கு என ஒரு அவதாரம் இருக்கு. நான் சிங்கிளா வந்து போறேன்னு நினைக்காதீங்க.. இன்னொரு அவதாரத்தை தரிச்சன்னா, நீங்க நாம் தமிழர் கட்சி, ஒரு கட்சியே நடத்த முடியாது. இந்த சீன் எல்லாத்தையும் 17 வயதிலேயே நான் பார்த்துவிட்டேன். என்னுடைய இன்னொரு அவதாரத்தை பார்த்தால் நாம் தமிழர் கட்சியினர் தாங்கமாட்டார்கள். இவ்வாறு வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே வீரலட்சுமி விவகாரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
