திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் ஆணையராக இருக்கும் வெங்கடேசன், தன்னுடைய அலுவலகத்துக்கு நிர்வாண நிலையில் இருந்த அகோரிகளை அழைத்து வந்து பூஜை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் நகராட்சி ஆணையர் வெங்கடேசன், 2-வது வார்டு பாஜக பொறுப்பாளர் அசோக், 2-வது வார்டு திமுக பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் அகோரியை அலுவலகத்துக்கு கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அழைத்து வந்திருக்கின்றனர் எனச் கூறப்படுகிறது. நகராட்சி அலுவலகத்துக்குள் இரண்டு அகோரிகள் நிர்வாணமாக வருவதைக் கண்ட பெண் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அந்த அகோரிகளை அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று, சிறிய பூஜை நடத்தி, அவரிடம் ஆணையர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், அசோக், சரவணன், அவருடைய தந்தை, ஆணையரின் ஓட்டுநர் ஆகியோர் ஆசி பெற்றனர். பின்பு அகோரிகள் சென்ற பின்னர்தான் பெண்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

20-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் நிலையில், ஆணையரின் அனுமதியுடன் நிர்வாண நிலையில் இருந்த அகோரிகளை அழைத்து பூஜை செய்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து காங்கேயம் நகராட்சித் தலைவர் சூர்யபிரகாஷ் கூறியதாவது, “ஆணையர் வெங்கடேசன் சொந்தக் காரணங்களுக்காக விடுமுறையில் இருக்கிறார். அவர் நகராட்சி அலுவலகத்துக்குள் அகோரிகளை கூட்டிவந்ததாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. அவர் சாமியார்களைத்தான் கூட்டி வந்து ஆசி பெற்றார். அவர்கள் நிர்வாணமாக வந்தது குறித்துக் கேட்கிறீர்கள். நகராட்சி அலுவலகத்துக்குள் சாமியார்கள் நிர்வாணமாக வந்தது குறித்து மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தற்போது இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பரின்டென்டெட் அலுவலகத்தில் மனு கொடுக்கவந்தது குறிப்பிடத்தக்கது.
