குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அதன் மூலமாக அவரின் கையை பழையபடியே இணைத்துள்ளனர்.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான கணேஷ், குடும்பத்தகராறு காரணமாக கடந்த 8ஆம் தேதி உறவினர்களால் அரிவாளால் தாக்கப்பட்டார். இதனால் கழுத்து, முதுகு போன்ற இடத்தில் காயமடைந்ததொடு வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் கணேசன் உறவினர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இவரை அனுமதித்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு திருப்பூர் மருத்துவமனையில் அறிவித்தனர். இதனால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அதனைக் கண்ட கோவை அரசு மருத்துவர்கள் இதனை எப்படியாவது ஒட்டி விடவேண்டும் என்று எண்ணினார்கள்.

அதனால் அவரின் கை பாகத்தை ஈரத் துணியால் சுற்றி பிளாஸ்டிக் பையில் வைத்து அதனை ஐஸ் கட்டிகள் நிறைந்த பொட்டியில் வைத்து பத்திரமாக வைத்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அந்த கையினை மீண்டும் இணைக்க முடிவு செய்தனர். துண்டான கையை உடலுடன் நினைக்கும் போது எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் இரத்த குழாய்கள் என அனைத்தையும் சரியாக கையுடன் இணைத்தனர்.
20 நாட்களுக்கும் மேல் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த கணேஷிற்கு கை கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு சென்று இருந்தால் பல லட்சம் செலவாகி இருக்கும். ஆனால் அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு நல்ல சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
