ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுயநினைவின்றி சாலையில் சரிந்து கிடக்கும் காட்சி உலகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைத்திருக்கிறது. மேற்கு ஜப்பானில் தனது லிபரல் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சின்சோ அபேவை மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். அபே பின் கழுத்துப் பகுதியிலும் மற்றொரு குண்டு இடுப்புப் பகுதியிலும் பாய்ந்தது.
இதில் ரத்தம் பீரிட்டு மூச்சிரைத்து விழுந்த சின்சோ அபேவை சுற்றி இருந்த போலீசார் அவசர அவசரமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்தனர். மறுபுறம் துப்பாக்கி சூடு நடத்தியவரை சாலையில் மடக்கிப்பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் ஜப்பான் ராணுவத்தின் சுய பாதுகாப்பு படையில் பணியாற்றிய 41 வயதான டெக்ஸியா யமஹா என தெரிய வந்துள்ளது. அபேவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததால் துப்பாக்கியால் சுட்டதாக அவர் போலீசாரிடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அபே சுடப்பட்ட முதல் தகவல் வெளியானதும் அனைவரும் கூறிய வார்த்தை என்னவென்றால் பாதுகாப்பான தேசத்தில இந்த படுகொலை என்பது தான் ? ஆம், ஜப்பானின் துப்பாக்கிச்சூடு வன்முறை நடப்பது என்றால் மிகவும் அரிதானது. அங்கு துப்பாக்கி வாங்குவது உரிமம் பெறுவது என்பது எல்லாம் அத்தனை எளிதான காரியமல்ல. அதுபோல அரசியல் வன்முறையும் அரிதானது. ஜப்பானிய மக்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர் சுடப்பட்டார் என்ற தகவல் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படியாவது உயிர் பிழைத்து விட வேண்டும் என அவர்கள் தங்களுடைய பிரார்த்தனையை மேற்கொண்டனர்.

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வெளியான செய்தி ஜப்பானிய மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாது இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. அபேவின் மரணத்திற்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் .நெருங்கிய நண்பரும் இந்தியாவின் பாரத பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தனது இனிய நண்பர்களில் ஒருவரான அபேவின் மறைவு பெரும் துயரை வருத்தத்தையும் தருகிறது என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அல்ஃபோனஸ் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
