மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை எதிர்த்து நக்மா காங்கிரஸ்க்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து அதிருப்தியை கிளப்பியுள்ளார்.
மாநிலங்களவையில் 57எம்பிக்களின் பதவி காலம் முடிவடையப் போகிறது. அதனால் மாநிலங்களவையில் காலியாகும் பணியிடங்களை கருத்தில் கொண்டு இதற்கான தேர்தல் தேதி வரும் 10ஆம் தேதி என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனால் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் கார்க்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதனை அறிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளருமான நடிகை நக்மா தனது கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் நேற்று பதிவிட்டு இருந்தபோது :- “2003-2004 ஆம் ஆண்டு நான் காங்கிரஸில் இணைந்த போது நாங்கள் ஆட்சியில் இல்லை அப்போது தலைவர் சோனியா காந்தி என்னை ராஜ்யசபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதி அளித்தார்.

அதன் பிறகு இப்போது பதினெட்டு வருடங்கள் ஆகி விட்ட போதும் கூட ஒரு வாய்ப்பை கூட அவர் எனக்குத் தரவில்லை. ஆனால் மகாராஷ்டிரா மாநிலதில் வேறு ஒருவருக்கு இடம் அளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன் நான் என்ன குறைவான தகுதியுடையவரா?” என்று பதிவிட்டுள்ளார். நக்மாவின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்ற கேள்வியும் எழ தொடங்கியுள்ளது.
