சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் திட்டத்தை முதல்வர் நாளை ஜூன் 4 துவக்கி வைக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
என்னதான் பஸ், டிரெயின், கார் ஏன் பிளைட் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கப்பலில் போகும் சுகம் போல எங்கேயும் கிடைக்காது. சுற்றி எங்கும் தண்ணீர். அதற்கு நடுவில் கப்பல் பொழுதுபோக்குக்கு விளையாட்டு அரங்குகள் சாப்பிட உணவுகள் என கப்பலில் கிடைக்காத பொருளே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு கப்பலில் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை நிறைய பேருக்கு இருக்கும். அந்த வகையில் தமிழக முதல்வர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் பயணத்தை நாளை துவங்கி வைக்கிறார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலாவுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், 5 நாள் சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவு அடங்கும். சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் பதினோரு தளங்கள் அமைந்துள்ளது. மொத்தம் 796 அறைகளும் உள்ளது. இது எல்லாம் தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் பெரிய கலையரங்கம் உள்ளது. மேலும் 4 பெரிய ரெஸ்டாரண்டில், மதுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல்குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இந்த கப்பல் இருக்கிறது.

இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 1,500 முதல் 2,000 பயணிகள் வரை பயணிக்கலாம் மற்றும் 800 ஊழியர்களை இந்த கப்பல் சுமந்து செல்ல உள்ளது. முதல்கட்டமாக இந்த கப்பலை இயக்கும் திட்டம் தொடங்க உள்ளது. மேலும் 2025ம் ஆண்டுக்குள் இதேபோல மேலும் 3 கப்பல்களையும் இயக்க உள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.