ஆடி மாதத்தில் கோவிலில் விழாக்கள் களைகட்டியுள்ள நிலையில் நாகப்பாம்பு ஒன்று ஆம்பூர் அருகே உள்ள சிவ ஆலயத்திற்கு வந்துள்ளது. நந்தி மீது படம் எடுத்து ஆடிய பாம்புக்கு கோவில் பூசாரி தீபாராதனை காட்டினார்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு மீது மக்களுக்கு அத்தனை பயம். அதே நேரத்தில் புற்றுள்ள கோவில்களில் பாம்புக்கு முட்டையும் பாலும் வைத்து வழிபடுவார்கள். நாகங்களை வழிபடும் வழக்கம் பல ஆண்டுகாலமாகவே இருந்து வந்துள்ளது. பல கோவில்களில் நாகங்கள் வழிபட வந்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் ராகு கேது தோஷப் பரிகார ஸ்தலங்களில் முதன்மையானது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் கோயில். ராகு கேது பரிகார தலமான இந்த ஆலயம் ஆதி ஷேசன், ராகு கேது சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற இடம். ஆதி ஷேசனுடைய மூல விக்ரகமும் உற்சவர் விக்ரகமும் இங்கு உள்ளது.

இது ஆதி ஷேசன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் கோவிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள். பாம்புகள் இங்கு உலவுவதாகவும் ஆனாலும் பாம்புகள் யாரையும் இங்கு தீண்டுவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். விஷம் தீண்டா பதி என்ற சிறப்பு பெயரும் இத்தலத்திற்கு உண்டு.

கடந்த 2002 மார்ச் 21 நாளில் காலையில் முதல் பூஜைக்காக நடை திறந்த போது விக்ரகத்தின் மேல் 7 அடி பாம்பு சட்டை இருந்திருக்கிறது. இன்றும் கோவிலில் அது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஞாயிரு செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் கர்ப கிரகத்தில் பாம்புகள் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது .

இதே போல ஆம்பூர் அருகே சிவ ஆலயம் ஒன்றுக்கு வந்த பாம்பு நந்தி மீது ஏறி நின்று பாம்பு படம் எடுத்து ஆடியது. திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை பகுதியில் சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று மாலை இங்குள்ள சிவபெருமான் வாகனமான நந்தி மீது நாகப்பாம்பு திடீரென படம் எடுத்தது. இதனைக் கண்ட பக்தர்கள் தங்கள் செல்போனில் படம் எடுத்து நாகப்பாம்பை வழிபட்டனர்.

மேளச்சத்தம் கேட்ட போது கூட பாம்பானது நகராமல் நந்தியின் கொம்புகளுக்கு மேல் படம் எடுத்து நின்றது. இதனையடுத்து கோவில் பூசாரி நாகப்பாம்பிற்கு தீபாரத்தனை காட்டினார். இது குறித்து தகவலறிந்து வந்த ஊர் மக்கள் நாகப்பாம்பை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். நாகப்பாம்பானது நீண்ட நேரம் நந்தி மீது நின்று சிவனை வழிபட்டுக் கொண்டிருந்ததை ஏராளமான பக்தர்கள் வீடியோ எடுத்தனர்.
