திமுகவின் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
திருச்சி சிவா திமுகவின் முக்கிய பிரமுகர். அவரின் மகன் தற்போது அப்பாவின் பேச்சையும் கேட்காமல் பாஜகவில் இணைந்துள்ளார். பாரம்பரியமாக பல ஆண்டுகளாக இருந்தும் தனது தந்தைக்கும், தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் பாஜகவில் இணைந்ததாக தகவல் தெரிவிக்கப் படுகின்றது.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் சேர முடிவு செய்திருப்பது கடந்த சில நாட்களாகவே சமூகவலைதளத்தில் இது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று அண்ணாமலையின் முன்னிலையில் அவர் உறுப்பினர் சீட்டை பெற்றுக் கொண்டு பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அப்போது பேசிய அவர் “தமிழகத்தில் பாஜக ஆளும் கட்சியாக வரும் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் நான் இணைந்துள்ளேன், திமுகவில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, அதனால் தான் அதிலிருந்து விலகி பாஜகவில் தற்போது இணைத்துள்ளேன்.

பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு வரவில்லை உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும் எனவும் மக்களுக்காக சேவை செய்யலாம் எனவும் தான் பாஜகவில் இணைந்து உள்ளேன். என் தந்தை அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் அதை ஓரம்கட்டிவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளேன்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் திமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக தெரிவித்தார் அது தொடர்பாக பேசிய அவர் “திமுகவில் பல்வேறு விதமாக உட்கட்சி அரசியல் நடைபெற்று வருகிறது. ஸ்டாலினின் மருமகன் ஒரு பக்கமும், உதயநிதி ஒரு பக்கமும், கனிமொழி ஒரு பக்கமும் என்ற அரசியல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கனிமொழியிடம் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தது நான் பாஜகவில் இணைய போவது உறுதி என்று முடிவெடுத்து விட்டதால் அவரின் அழைப்பை எடுக்கவில்லை” என கூறியிருக்கிறார்.
