எழுதாத பேனாவிற்கு ரூ 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-

திமுக ஆட்சி பொறுப்பேற்று 27 மாத காலம் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மாணவர்களின் க:ல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம், பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப்-க்கு பதிலாக டேப் கொடுக்கிறோம் என்று கூறிவிட்டு பிறகு டேப் வழங்குவது சரியாக இருக்காது நாங்கள் மடிக்கணினியை வழங்குகிறோம் என்று கூறி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், சமீப காலமாக போதுமான உற்பத்தி இல்லை போதுமான நிதி இல்லை என்று கூறி தட்டிக்கழிப்பது மாணவர்களையும் மக்களையும் முட்டாளாக்க முயலும் செயல்.

எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைப்பதற்கு நிதி இருக்கும் போது மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க மட்டும் நிதி இல்லையா? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் திமுக, வெற்று விளம்பரங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தாமல், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 லட்சம் பேர் பயன்பெற்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் இந்த லேப்டாப் திட்டம் முடங்கியதாகவே கூறுகிறார்கள்.
