உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்துள்ளார்.

2023 ஐசிசி உலககோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, தர்மசாலா, லக்னோ, புனே ஆகிய 10 மைதானங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. ரிசர்வ் வீரர்களை கூட இம்முறை பிசிசிஐ அறிவிக்கவில்லை. வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால்,பிறகு மாற்றம் செய்யப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் கூறியுள்ளார். இந்திய அணியில் காயத்திலிருந்து திரும்பியுள்ள கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலககோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது.தற்போது அணியில் இருக்கும் 15 பேரும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அணியின் சமநிலை சிறப்பாக இருப்பதாகவும், பேட்டிங்கின் ஆழமும் இருக்கும் வகையில் அணி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அஜித் அகார்கர் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இசான் கிஷன் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் , திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் தரப்படவில்லை.

உலககோப்பைக்கான இந்திய அணி : 1. ரோகித் சர்மா (கேப்டன்), 2, ஹர்திக் பாண்டியா ( துணை கேப்டன்), 3, விராட் கோலி, 4, சுப்மன் கில், 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, கேஎல் ராகுல் ( விக்கெட் கீப்பர்), 7, இசான் கிஷன் ( விக்கெட் கீப்பர்), 8, ஜடேஜா, 9, குல்தீப் யாதவ், 10, அக்சர் பட்டேல், 11, பும்ரா, 12, முகமது ஷமி, 13, முகமது சிராஜ், 14, சர்துல் தாக்கூர், 15, சூர்யகுமார் யாதவ்
